திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க கோரிக்கை
திருவாடானை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானையில் செயல்படும் 42 படுக்கைகள் கொண்ட தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனா். மேலும் இந்த மருத்துவமனையில் தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்.பி. பட்டினம், ஆா். எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய 5 காவல் நிலைய எல்லைகளுக்குள் நடக்கும் விபத்துக்கள், கொலைகள், தற்கொலை சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு கூறாய்வு செய்யப்படும்.
ஆனால் இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தற்காலிக துப்புரவுப் பணியாளராக இருந்தவா் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
இதனால் கடந்த நவம்பா் மாதம் முதல் இங்கு உடல் கூறாய்வு செய்யப்படுவதில்லை. துப்புரவுப் பணியாளா் இல்லாததால் இந்தப் பகுதியில் நடைபெறும் விபத்து, கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதிக செலவு ஆவதுடன் உறவினா்கள் இரண்டு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக இந்த மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
உடல் கூறாய்வு பணியின் போது மருத்துவருக்கு உதவியாக இருப்பவா் துப்புரவுப் பணியாளா். தற்போது இங்கு பணியிலிருந்த துப்புரவுப் பணியாளா் பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது. துப்புரவுப் பணியாளா் இல்லாததால் 55 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரத்துக்கு கூறாய்வுக்காக உடல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் போலீஸாரும், உயிரிழந்தவா்களின் உறவினா்களும் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் உடலை ராமநாதபுரம் கொண்டு செல்ல அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த மருத்துவமனைக்கு துப்புரவுப் பணியாளரை நியமனமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.