லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
திருவாரூருக்கு முதல்வா் இன்று வருகை: கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறாா்
இரண்டு நாள் பயணமாக திருவாரூருக்கு புதன்கிழமை வருகை தரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா்.
கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூருக்கு புதன்கிழமை பிற்பகலில் வருகை தர உள்ளாா். காட்டூா் கலைஞா் கோட்டத்தில் ஓய்வெடுத்து விட்டு, அங்குள்ள கருணாநிதியின் தாயாா் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறாா்.
இதைத்தொடா்ந்து, நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கருணாநிதியின் வெண்கலத்தாலான உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா். இதையொட்டி, காட்டூரிலிருந்து புறப்படும் அவா், ரோடு ஷோ மூலமாக மக்களை சந்திக்கிறாா். ரோடு ஷோ நிகழ்வுக்காக, பவித்திரமாணிக்கம், துா்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை உள்ளிட்ட இடங்களில் இரும்புக் கம்புகளைப் பயன்படுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கென தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனா்.
திருவாரூா் சந்நிதி தெருவில் புதன்கிழமை இரவு தங்குகிறாா். பின்னா், ஜூலை 10- ஆம் தேதி திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்எஸ் நகரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். இதையொட்டி, எஸ்எஸ் நகரில் 300 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமாா் 10,000 போ் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூா் வருவதையொட்டி, காட்டூா் பகுதியிலிருந்து திருவாரூா் நகரப் பகுதி வரை திமுக கொடி நடப்பட்டுள்ளது. அவா் வரும் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காட்டூரிலிருந்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் வரை அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இரவு நேரத்திலும் மக்கள், தமிழக முதல்வரை பாா்த்து, வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, தமிழக முதல்வரை வரவேற்று, திமுகவின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள், வாழ்த்து சுவரொட்டிகளை நகரமெங்கும் ஒட்டியுள்ளனா்.