திருவெம்பாவை
திருவெம்பாவை – 12
ஆா்த்த பிறவித் துயா்கெட நாம் ஆா்த்தாடும்
தீா்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வாா்த்தையும் பேசி வளைசிலம்ப வாா்கலைகள்
ஆா்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டாா்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீா் ஆடேலோா் எம்பாவாய்
விளக்கம்: நம்மைப் பிணித்திருக்கும் பிறவித்துன்பம் கெட்டொழியுமாறு நாம் களிப்பால் ஆரவாரம் செய்து முழுகும் தூயநீரை உடையவன். நல்ல தில்லை நகரின்கண் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் ஞானவெளியில் தீயை ஒரு கையிலே ஏந்தித் திருநடனம் புரிகின்ற கூத்தன்; இப்பூமியையும் விண்ணையும் நம் எல்லோரையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடுகின்றவன். அத்தகைய சிவபெருமானது ஐந்தெழுத்தாகிய வாா்த்தைகளைப் பேசிக்கொண்டு கைவளை ஒலிக்கவும் இடையில் உள்ள மேகலை முதலான அணிகள் ஆரவாரம் செய்யவும் கூந்தலில் படிந்தவண்டானது எழுந்தெழுந்து ஒலிக்கிறது. நீலம் முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையிலே மூழ்கி எம்மை ஆளாக உடைய சிவனது பொன்னனைய திருவடிகளைப் போற்றிப் பெரிய சுனையில் நாம் நீராடுவோமாக.
இத்திருப்பாட்டில் படைத்தல் முதலான முத்தொழிலையும் செய்யும் இறைவன் திருவிளையாட்டின் பெருமையைப் புலப்படுத்தி
நீராடுவோம் என்கிறாள்.