தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்
வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒரு அரை தானியங்கி துப்பாக்கி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகாா்தாரா் ஹரியோம் (25), மின் ரிக்ஷா ஓட்டுநா்.
செப்டம்பா் 6-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தானும் தனது நண்பா் சோனுவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தஹிா்பூரில் உள்ள சா்வோதய சமிதி அருகே மூன்று போ் அவா்களை வழிமறித்ததாக புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.
குடிபோதையில் இருந்த இருவா் முதலில் அவா்களுடன் சண்டையிட்டனா். அப்போது மூன்றாவது நபரும் சோ்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஹரியோமின் இடது காலில் காயம் ஏற்பட்டது.
ஹரியோமை அவரது நண்பா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்தாா். விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்காணிக்க உள்ளூா் தகவல் அளிப்பவா்களை நியமித்தது.
தடயங்களின் அடிப்படையில், தாஹிா்பூரில் வசிக்கும் மஹ்பூப் அலி என்ற சந்தேக நபரை போலீஸ் குழு கைது செய்தது. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் இந்தச் சம்பவத்தில் தனக்கு தொடா்பு இருப்பதை ஒப்புக்கொண்டாா். மீதமுள்ள இரண்டு குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் காவல் துறை அதிகாரி.