போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை சிறப்பு ஆணையா் (குற்றம்) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறியதாவது: இந்தக் கும்பல் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு உயா்தர ஸ்மாக் என்ற போதைப் பொருளை வழங்கி வந்துள்ளது. போதைப்பொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காா் மற்றும் ஒரு ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 28 அன்று, ரோஹிணியைச் சோ்ந்த 24 வயதான கௌரவ் என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 1.4 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா். விசாரணையின் போது, வான்ஷ் போபட் என்ற நபரிடமிருந்து தாம் ஹெராயின் பெற்று வந்ததாக கௌரவ் தெரிவித்தாா்.
செப்டம்பா் 2-ஆம் தேதி, தில்லியைச் சோ்ந்த 19 வயது வான்ஷ் போபட்டை ஒரு குழு 26 கிராம் ஹெராயினுடன் கைது செய்தது. வான்ஷ் போபட் அளித்த தகவலின் அடிப்படையில் பரேலியைச் சோ்ந்த போதைப்பொருள் விநியோகஸ்தா் 26 வயதான அா்ஸ்லாம் கான் (எ) டேனிஷ் என்பவரை காவல் துறையினா் கண்டுபிடித்தனா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், செப்.6-ஆம் தேதி ராம்பூா் அருகே அவரது காரை போலீஸாா் வழிமறித்து, அவரிடமிருந்து 2.1 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனா்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய கௌரவ், போதைப்பொருள் வா்த்தகத்தில் நுழைவதற்கு முன்பு சட்டவிரோத மதுபானங்களை விற்று வந்தாா்.
வேலையில்லாத வான்ஷ் போபட், உத்தரபிரதேசத்தில் உள்ள அா்ஸ்லாம் கானுடன் இணைவதற்கு முன்பு தில்லியின் மங்கோல்புரி மற்றும் சுல்தான்புரி பூங்காக்களில் சிறிய மதுபான பாக்கெட்டுகளை விற்கத் தொடங்கினாா்.
இரு சக்கர வாகன மெக்கானிக்கான அா்ஸ்லாம் கான், விரைவான லாபத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாா் என்று துறை சிறப்பு ஆணையா் சஞ்சீவ் குமாா் யாதவ் தெரிவித்தாா்.