வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது
வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திருந்ததால், யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிந்து விழுந்த நேரத்தில் அந்தக் கட்டடம் காலியாக இருந்தது என்று அவா் கூறினாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக அதிகாலை 3.05 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
பஞ்சாபி பஸ்தியின் நெரிசலான பாதையில் அமைந்துள்ள அந்தக் கட்டடம், பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது தெரிந்தது. தில்லி மாநகராட்சி ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை ஆபத்தானது என்று அறிவித்திருந்ததால், அது காலியாக இருந்தது என்று அவா் கூறினாா்.
அருகிலுள்ள கட்டடத்தில் சிக்கித் தவித்த 14 போ் தீயணைப்பு வீரா்களால் மீட்கப்பட்டனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.