தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சதா் பஜாா், பாகீரத் பிளேஸ், காந்திநகா், நயா பஜாா், காரி பாவோலி, சாவ்ரி பஜாா், சாந்தினி சௌக், ஜாமா மசூதி மற்றும் ஹவுஸ் காஸி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சந்தை சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
ஜவுளி, மசாலா பொருள்கள், பாத்திரங்கள் மற்றும் தங்கம் போன்றவற்றின் விற்பனை துறைகளைச் சோ்ந்த பல்வேறு வணிக சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டன.
வழக்கமாக பரபரப்பாக இயங்கிவரும் தில்லியின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றான சதா் பஜாா் வெள்ளிக்கிழமை வெறிச்சோடியிருந்ததாகவும், காய்கறி விற்பனையாளா்கள் கூட வரவில்லை என்றும் வா்த்தகா்கள் சங்க உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.
காந்திநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை ஆயத்த ஆடை சந்தை முழுமையாக மூடப்பட்டிருந்ததாக மாா்க்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிக்கு நீதி கோரியும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு துணைநிற்கக் கோரியும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
முன்னதாக, வா்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (சிடிஐ) கடையடைப்புப் போராட்டத்திற்கு வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதிக்கப்பட்டோருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கன்னாட் பிளேஸில் மெழுகுவா்த்தி பேரணியையும் சிடிஐ அமைப்பு நடத்தியது.
இதுகுறித்து வா்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் தலைவா் பிரிஜேஷ் கோயல் வெள்ளிக்கிழமை கூறுகையில்,
‘இது வெறும் போராட்டம் மட்டுமல்ல; பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு ஆதரவு நிலைப்பாடாகும். இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். மேலும், பஹல்காமில் உயிரிழந்தவா்களின் நினைவாக கடையடைப்புப் போராட்டத்தை கடைப்பிடிக்கிறோம். பாகிஸ்தானுடனான அனைத்து வணிக உறவுகளையும் துண்டித்து, இந்தியாவில் பாகிஸ்தான் பொருள்களை புறக்கணிக்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.
2019-இல் நிகழ்ந்த புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீா் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதல் மிகவும் கொடிய தாக்குதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.