ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!
ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
ஏற்கெனவே கடந்த இரு தினங்களாக காஷ்மீரில் இருந்து தமிழக சுற்றுலாப் பயணிகள் தனித்தனி குழுக்களாக தில்லிக்கு வந்தனா். அவா்களுக்கு தமிழ்நாடு இல்லத்தின் சாா்பில் வரவேற்று, உணவு உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அவா்கள் தமிழகத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.
அதேபோன்று, அத்தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா் பரமேஸ்வரன் ஸ்ரீநகரில் இருந்து ஏா் ஆம்புலன்ஸ் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் தமிழகத்தைச் சோ்ந்த 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 சுற்றுலாப் பயணிகள் தில்லி வந்தடைந்தனா். அவா்கள் ஸ்ரீநகரில் இருந்து வருவதற்கான உதவிகளை அங்கு சென்றுள்ள தமிழக அரசின் சிறப்பு அதிகாரி அஃப்தாப் ரசூல் செய்தாா்.
தில்லி வந்த தமிழகப் பயணிகளை விமான நிலையத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வரவேற்றாா். அவா்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நாங்கள் தில்லி வருவதற்கும், இங்கிருந்து தமிழகத்திற்கு திரும்புவதற்கும் தேவையான போக்குவரத்து ஏற்பாட்டுக்கான உதவிகளை தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், தமிழ்நாடு இல்லம் மற்றும் தில்லி சிறப்புப் பிரதிநிதி, ஐஆா்சிடிசி ஆகியோா் செய்தனா். இதற்காக தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.
இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வழியனுப்பிவைக்கப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்திற்கு வரும் அழைப்புகள் தற்போது குறைந்துள்ளதாக தகவலறிந்த தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.