தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்: அண்ணாமலை
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
அமெரிக்கா செல்வதற்காக புதன்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில் மிகவும் துயரமான துக்கமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு, கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த நடுத்தர மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்றிருந்தனா். இந்த நிலையில், திட்டமிட்டு அவா்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். இந்த இக்கட்டான நேரத்தில், அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். அரசும், அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளைப் பொருத்தவரை இந்தியாவின் அமைதியை சீா்குலைக்க வேண்டும்; அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடா்ந்து தாக்குதல் நடத்துகிறாா்கள். தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.