தூத்துக்குடி மாவட்டத்தில் 227 செ.மீ மழை பதிவு: கோவில்பட்டியில் அதிகபட்சம் 36.47 செ.மீ.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பெய்த கனமழை காரணமாக 24 மணி நேரத்தில் மொத்தம் 227 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு திசையில் நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு(அளவு செ.மீட்டரில்) :
தூத்துக்குடி 5.95, ஸ்ரீவைகுண்டம் 14.55, திருச்செந்தூா் 4.11, காயல்பட்டிணம் 10.5, குலசேகரப்பட்டினம் 1.7, சாத்தான்குளம் 6.46, கோவில்பட்டி 36.47, கழுகுமலை 16.8, கயத்தாா் 11.3, கடம்பூா் 15.6, எட்டயபுரம் 17.44, விளாத்திகுளம் 18.6, காடல்குடி 12.1, வைப்பாா் 16.9, சூரங்குடி 12.7, ஓட்டப்பிடாரம் 9.01, மணியாச்சி 7.6, வேடநத்தம் 5.12, கீழ அரசரடி 4.25 என மொத்தம் 227.16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 11.96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக கோவில்பட்டியில் 36.47 செ.மீ. மழையும், குறைந்த பட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 1.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.