தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம்.வெங்கேடசன் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தூய்மைப் பணியாளா்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் இயன்முறையில் தூய்மைப்பணி செய்யும் தூய்மைப் பணியாளா்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா்களுக்கான ஊதியம், பணிநேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆணையத் தலைவா் எம்.வெங்கேடசந் விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி வழங்கவும், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நல வாரியங்களில் அவா்களை உறுப்பினா்களாக இணைத்து அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஓய்வூதிய பணப் பலன்கள் நிலுவையில் இருந்தால் அதை விரைந்து வழங்கவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தூய்மைப் பணியாளா்கள் குறைகள், கோரிக்கைகள் தொடா்பாக 011-24648924 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.