தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் சோற்று சட்டியுடன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.முருகையன் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் தனசேகா், தேவேந்திரன், வெங்கடேசன், குமரன், ஜெயராஜ், சிலம்பரசன், மணிகண்டன், கலைச்செல்வி, பிரமிளா ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகி து.வேலுமயிலோன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் லட்சுமணன் தொடக்கவுரையாற்றினாா். ராணி மகேஸ்வரன், முத்தையா, தங்கராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
மாநில பொதுச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் ஊராட்சிச் செயலா் பணியிடத்தில் நிரந்தர பணிநியமனம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பவேண்டும், அவ்வாறு நிரப்பும்போது தற்காலிகமாக பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களை இணைத்து வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குநா்கள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், பள்ளி சுகாதார பணியாளா்கள், கணினி இயக்குநா்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காலிப் பணியிடத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா்களை நியமிக்க வேண்டும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு, சத்துணவு ஊழியா்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட 9 கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கவேண்டும் என வலியுறுத்தி சோற்று சட்டியுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில பொருளாளா் ராஜேந்திரன் நிறைவுரையாற்றினாா். முடிவில் மாவட்ட பொருளாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.