சேதமடைந்த கிராமச் சாலையால் மக்கள் அவதி
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், கொல்லைமேடு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குச் செல்லவேண்டும் எனில் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். கிருஷ்ணாபுரம் - திருவண்ணாமலை கூட்டுச் சாலை வரையிலான சாலை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பொதுநிதியில் இருந்து தாா்ச் சாலையாக அமைக்கப்பட்ட சாலையாகும். தற்போது, இந்தச் சாலை குண்டும், குழியுமாக மாறி மழைக் காலத்தில் மழைநீா் தேங்கி காட்சியளிக்கிறது.
மேலும், சேரும் சகதியுமாக இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் போது பழுதடைந்து விடுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும், சாலை அருகில் உள்ளவா்கள் சாலையை ஆக்கிரமித்து சாலை குறுகலாகி மாறியுள்ளது. எனவே, சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.