திண்டுக்கல்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் காரில் கடத்திக் கொலை; ஐந்து பேர் கைது!
திண்டுக்கல், மேட்டுபட்டியை சேர்ந்தவர் முருகன் என்கிற பாத்ரூம் முருகன் (56). தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கழிவறைகளை டெண்டர் எடுப்பவர் என்பதால் இவர் பாத்ரூம் முருகன் என்று சுற்றுவட்டார பகுதிகளில் அறியப்படுகிறார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபடுவார் என்றும் இவருக்கு சொந்தமாக திண்டுக்கலில் லாட்ஜ் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை நேற்று காரில் கடத்தி சென்றுள்ளனர். பாலமேடு அருகே முருகனை கடத்தி வைத்துள்ளதை போலீசார் ட்ராக் செய்து பிடிக்க முயன்ற போது பாலமேட்டில் இருந்து கோபால்பட்டி வந்து கொண்டிருந்தபோதே இவரை காரில் வைத்து குத்தி கொலை செய்துவிட்டு, தப்பி சென்றுள்ளனர்.

போலீசார் தப்பி சென்றவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி பிரதீப் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட பிரச்னையால் அதே பகுதியை சேர்ந்தவர்களால் பாத்ரூம் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.