இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா கண்டனம்!
மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைக்க, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களின் வெஸ்ட் பாங்க் என்ற அழைக்கப்படும் மேற்கு கரை நகரத்தை, ஆக்கிரமித்து இணைப்பதற்கு இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில், நேற்று (ஜூலை 23) தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் சட்ட ரீதியான தாக்கங்களைக் கொண்டிருக்காது எனக் கருதப்பட்டாலும், சர்வதேச நாடுகள் சில அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை எனக் கூறி, அந்நாட்டின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
”இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, நிலப்பகுதிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது எனும் அடிப்படை கொள்கைகளை மீறியுள்ளது.
இரு மாநில தீர்மானத்துக்கு இணங்கி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்ட, 1967-க்கு முந்தைய எல்லைகளுக்குள் பாலஸ்தீனத்தை நிறுவி, இறையாண்மைக் கொண்ட அரசை உருவாக்குவதற்கான எங்களது ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளை, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!