குழந்தைகளைக் கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி!
கடந்த 2018-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த அபிராமி பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து (மாத்திரைகள்) கொடுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்தக் குற்றச்சாட்டில் அபிராமியை குன்றத்தூர் போலீஸார் கைது செய்து விசாரித்ததில் இந்தக் கொலையில் அபிராமியின் ஆண் நண்பரான பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதோடு இவர்கள் இருவரும் டிக்டாக் மூலம் பழகி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்தது. இவர்களின் இந்த பழக்கத்துக்கு தடையாக குழந்தைகள் இருந்ததால் அவர்களை கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டது. குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியை குன்றத்தூர் போலீஸார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். அதைப் போல மீனாட்சி சுந்தரத்தை புழல் ஆண்கள் சிறையில் அடைத்திருந்தனர்.

இவர்கள் இருவர் மீதும் சதி திட்டம் தீட்டுதல், கொலை உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதோடு இந்த வழக்கை குன்றத்தூர் போலீஸார் சிறப்பாக புலனாய்வு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தனர். அதோடு இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம் இன்ஸ்பெக்டர் வேலு, நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர் ராஜ்கிரன் ஆகியோர் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் ஆஜர்படுத்தியதோடு தேவையாக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். அப்போது ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் இருவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜராகி வந்தார். வழக்கில் இன்று நீதிபதி செம்மல், குற்றவாளிகளான அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதோடு தலா 15,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார். தீர்ப்பை கேட்ட அபிராமி சிறை வளாகத்திலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகாவிடம் பேசினோம். ``இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் அபிராமி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 25 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் அபிராமிக்கு எதிராகவும் மீனாட்சி சுந்தரத்துக்கு எதிராக சாட்சியளித்தனர். பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டே குன்றத்தூர் போலீஸார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடித்து வந்தனர். அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் ஜாமீன் கேட்டபோதெல்லாம் சட்டரீதியாக பதிலடி கொடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வைத்தோம். அதனால் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையிலிருந்தனர்.

இந்த வழக்கில் இரண்டு குழந்தைகளும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை தெளிவாக நீதிமன்றத்துக்கு ஆதாரங்களுடன் தெரிவித்தோம். அதோடு அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சமர்பித்தோம். அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் டிக்டாக் மூலம்தான் நட்பு ஏற்பட்டதையும் நீதிமன்றத்தில் சுட்டக்காட்டியிருந்தோம். ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில்தான் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்தாலும் அங்கும் அரசு தரப்பு வாதங்களை எடுத்துரைப்போம்" என்றார்.
சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது ``பெற்ற குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான அபிராமி, ஆரம்பத்தில் சிறையில் யாருடனும் பேசாமல் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அபிராமிக்கு கவுன்சலிங் அளித்தோம். அதன் பிறகு அபிராமி ஒரளவு நார்மலாகினார். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சிறை திரும்பும்போது மனவேதனையுடன் காணப்படுவார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அவருக்கு சிறை வாழ்க்கை பழகிவிட்டது. என்ன தீர்ப்பு கிடைக்கும் என சக கைதிகளிடம் கேட்ட அவர், இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருந்தார். தன்னுடைய முகம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் துப்பட்டவால் மூடிக் கொண்டு சிறைக்கு வந்தார். அதைப்போல கறுப்பு நிற சுடிதாரையும் அவர் அணிந்து நீதிமன்றத்துக்கு வந்தார்'' என்றனர்.