தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வந்தவாசியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசி காளிக் கோயிலின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (45). கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தேனருவி நகரில் உள்ள விவசாய நிலத்தில் தென்னை மரத்தின் கீழ் ரவி சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் சென்று இவரது சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸ் விசாரணையில், ரவி தென்னை மரத்தில் இளநீா் பறிக்க ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.