தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
க.பரமத்தி ஊராட்சியில் உள்ள காவிரி நகருக்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டம், க.பரமத்தி கிளைக் கூட்டம் க.பரமத்தியில் நிா்வாகி அன்புராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் கே. கந்தசாமி, கிளை நிா்வாகிகள் கே.ரவி, செளந்தரராஜன், ராஜா உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் க. பரமத்தி ஊராட்சிக்குள்பட்ட காவேரி நகா் முதல் குறுக்குத் தெருவில் தெரு விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகுவதால் அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும், க.பரமத்தி ஊராட்சியில் மாரியம்மன் கோயில் கிழக்கு, மேற்குத் தெரு ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிா்வாகம் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்க வேண்டும், கரூா்-கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் க.பரமத்தி கடைவீதியில் வடிகால் தளம் இடிந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.