திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தில்லியில் குழந்தைகளும் முதியவர்களும் தெருநாய்களால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தில்லியில் தெருநாய்கள் இல்லாத வகையிலான சூழலை ஏற்படுத்த தில்லி அரசு, தில்லி மாநகராட்சி மற்றும் புதுதில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இதில், எவ்வித சமரசமும் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்ததாவது:
“தில்லி அரசு, தில்லி மாநகராட்சி மற்றும் புதுதில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் இணைந்து 8 வாரங்களில் நாய்கள் காப்பகங்களை உருவாக்க வேண்டும். அங்கு அடைக்கப்படும் தெருநாய்களுக்கு தினசரி பதிவை பராமரிக்க வேண்டும். காப்பகங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். நாய்களுக்கு கருத்தடை மற்றும் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.
ஒரு வாரத்துக்குள் நாய்கடிகள் பற்றி புகாரளிக்க உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.
தில்லி மற்றும் தலைநகர் வலையப் பகுதிக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும். காப்பகத்தில் அடைக்கப்பட்ட ஒரு நாயைகூட விடுக்கக் கூடாது.
ரேபீஸ் தடுப்பூசி கிடைக்கும் இடங்களை வெளியிட வேண்டும். நாய்களை பிடிக்கும் நடைமுறையை தடுக்க முயற்சிக்கு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 6 வாரங்களுக்கு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ப. சிதம்பரம் கருத்து
உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ”ஒவ்வொரு நகரத்தின் புறநகரங்களிலும் நாய்கள் காப்பகம் உருவாக்கப்பட்டு, தெருநாய்களை அங்கு அடைத்து பராமரிக்க வேண்டும். நாய்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் வசதிகள் நிச்சயம் ஏற்படுத்த வேண்டும்.
தெருக்கள் சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இருப்பது அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார்.