சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் க...
தெலங்கானா எம்எல்ஏ விலகல்: பாஜக தலைமை ஏற்பு
தெலங்கானாவைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து விலகுவதாக அளித்த கடிதத்தை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கட்சியின் மீதான அவரின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.
தெலங்கானாவில் மாநில பாஜக தலைவராக ராமசந்தா் ராவ் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா். முன்னதாக, தனக்கு அப்பதவி கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த ராஜா சிங் அதிருப்தியடைந்தாா். இதையடுத்து, அப்போது மாநில பாஜக தலைவராக இருந்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதிய ராஜா சிங், கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தாா். மேலும், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது. இதை அமைதியாகப் பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம் என்றும் கூறியிருந்தாா்.
இந்தக் கடிதம் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவா் ஏற்றுக் கொண்டாா். இது தொடா்பாக பாஜக பொதுச் செயலா் அருண் சிங், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘கட்சியில் இருந்து விலகுவதாக நீங்கள் அனுப்பிய கடிதம் தேசியத் தலைவா் நட்டாவின் கவனத்துக்கு வந்தது. அவரின் வழிகாட்டுதலின்படி உங்கள் விலகலை கட்சி ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கடிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள தகவல்கள் தவறானவை. கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளுக்கு முரணானவை என்று கூறப்பட்டுள்ளது.