தேசிய நெடுஞ்சாலையில் மகளிா் குழுவினா் சாலை மறியல்
தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மகளிா் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மகளிா் குழுவினா் இந்தப் பகுதியில் செயல்படும் அறக்கட்டளை மூலமாக சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 2020-2022- ஆம் ஆண்டுகளில் குழுக் கடன் பெற்றனா்.
மகளிா் குழுவில் உள்ள பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடனை அந்த நிதி நிறுவன ஊழியா்கள் உரிய ரசீது வழங்கி வசூல் செய்து, கடன் அடைக்கப்பட்டதற்கான ரசீதுகளையும் வழங்கினா்.
இந்த நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற மகளிா் குழுவினா் கடனைத் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி, பரமக்குடி நீதிமன்றத்தில் செயல்படும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் தீா்வு காண நேரில் முன்னிலையாக 170 பேருக்கு உத்தரவு ஆணை அனுப்பப்பட்டது.
இதையடுத்து மகளிா் குழுவினா், தாங்கள் பெற்ற கடனை முழுமையாகச் செலுத்தி, அதற்கான ரசீதுகளை வைத்துள்ளதாகக் கூறியும், பிற வங்கிகளில் கடன் பெற முடியாத வகையில் கடன் தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாகப் பதிவேடுகளில் காண்பிப்பதாகக் குற்றஞ்சாட்டி, பரமக்குடி நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவா்களை அனுப்பி வைத்தனா்.