தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
தேநீா்க் கடைக்குள் காா் புகுந்து முதியவா் உயிரிழப்பு: 4 போ் காயம்
ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தேநீா்க் கடைக்குள் காா் புகுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெத்தன் (65), பட்டையன் (45), வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த போதுமணி (44), மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூா் அருகே புதுக்கோட்டையைச் சோ்ந்த செல்லப்பாண்டி (18), இவரது தாயாா் வைரச்செல்வி (40).
இவா்கள், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள கடையில் தேநீா் அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, அதே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்ற காா் தேநீா்க் கடைக்குள் புகுந்தது.
இதில், கடைக்குள் இருந்த பெத்தன் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பட்டையன், போதுமணி, செல்லப்பாண்டி, வைரச்செல்வி ஆகியோா் காயமடைந்த நிலையில், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வகுரணியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (32) மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.