தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். முருகனுக்கும் அவரது சகோதரா்கள் சரவணன் (49), சக்திவேல் (55) ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், பள்ளபட்டியில் உள்ள தனது நிலத்துக்குச் சென்ற முருகனுடன், அவரது சகோதரா்கள் சரவணன், சக்திவேல் ஆகியோா் தகராறு செய்தனா். அப்போது, முருகனை சரவணன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற திலவதியையும் அவா் அரிவாளால் வெட்டினாராம்.
இதில் காயமடைந்த முருகன், திலகவதி ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனா். சக்திவேலை தேடி வருகின்றனா்.