`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்
மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலில் போட்டியிட லட்சுமி பாயிடம் பணம் இல்லை. இதையடுத்து தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.20 லட்சத்தை கடனாக வாங்கி தேர்தலில் செலவு செய்து வெற்றியும் பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டார்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் தேர்தலுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர் தொடர்ந்து கடனை திரும்ப கொடுக்கும்படி கேட்டு நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

லட்சுமி பாய் கடனை திரும்பக் கொடுக்க பல இடங்களில் புதிய கடன் கேட்டுப்பார்த்தார். ஆனால் எங்கும் கடன் கிடைக்கவில்லை. இதையடுத்து ரன்வீர் சிங் என்பவரை சந்தித்து கடன் கேட்டார்.
அவர், தான் ரூ.20 லட்சம் கடனை அடைத்துவிடுவதாகவும், அதேசமயம் பஞ்சாயத்தை தனக்கு குத்தகைக்கு விடவேண்டும் என்றும், பஞ்சாயத்து வேலைகளை தான் செய்து கொள்வதாகவும் கூறினார். இது லட்சுமி பாயிக்கு பிடித்துப்போனது.
இதையடுத்து லட்சுமி ராயும், ரன்வீர் சிங்கும் 100 ரூபாய் முத்திரை தாளில் பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதில் 20 லட்சம் கடனை ரன்வீர் செலுத்தவேண்டும் என்றும், பஞ்சாயத்து வேலைகளை செய்யும்போது அதில் 5 சதவீதத்தை கமிஷனாக கொடுக்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த குத்தகை ஒப்பந்தம் குறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்தது. லட்சுமி பாயும், ரன்வீரும் செய்து கொண்ட ஒப்பந்த நகல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் லட்சுமி பாய் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பஞ்சாயத்து தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டார்.
இது குறித்து லட்சுமி பாய் கணவர் சங்கர் கூறுகையில், ''நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை. அப்படி இருந்தும் லட்சுமி பாய் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்''என்று தெரிவித்தார்.
``பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பு தலைவர் பதவியை ஏலம் விடுவது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பஞ்சாயத்தையே குத்தகைக்கு விடுவது புதிதாக இருக்கிறது.'' என்று நெடிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.