தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வாகனம் மீது தாக்குதல்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
தில்லியில் வருகிற பிப். 5 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் பிரவேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்ஷித் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க | ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!
இந்த நிலையில், இன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கேஜரிவால் மீது பாஜக வேட்பாளர் பிரவேஷ் சர்மாவின் ஆதரவாளர்கள் செங்கல், கற்கள் ஆகியவற்றை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தங்களின் எக்ஸ் தளப் பக்கத்தில், “பாஜக தோல்வி பயத்தில் அரவிந்த் கேஜரிவாலைத் தாக்க தனது குண்டர்களை அனுப்பி அவரது பிரச்சாரத்தைத் தடுக்க முயன்றது. இந்தக் கோழைத்தனமான தாக்குதல்களால், கேஜரிவால் ஒருபோதும் பயப்படமாட்டார். தில்லி மக்கள் உங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” எனப் பதிவிட்டு தாக்குதல் தொடர்பான விடியோ காட்சிகளைப் பதிவிட்டிருந்தனர். அந்த விடியோவில் கேஜரிவால் காரின் முன்பு சிலர் கருப்புக் கொடிகளை காட்டுவதும் பதிவாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்த பாஜகவின் பிரவேஷ் சர்மா, “மக்கள் கேஜரிவாலிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர் தனது காரில் இரண்டு இளைஞர்களை மோதினார். இருவரும் லேடி ஹார்டிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விரக்தி மனநிலையில் இருக்கும் அவர் மக்கள் உயிரின் மதிப்பை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. நான் அவர்களைக் காண மருத்துவமனைக்குச் செல்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.