தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!
தேர்தல் விதிகளை கடுமையாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அனைவரையும் ஒரு பரபரப்பிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில், இனி அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் குடியுரிமைச் சான்று கட்டாயம் மற்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, வாக்குச் சீட்டுகள் கிடைக்கப் பெறுதல் உள்ளிட்ட தேர்தல் விதிகளை கடுமையாக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்கு முந்தைய அமெரிக்க அரசு தேர்தல் நடத்துவதில் அடிப்படை மற்றும் தேர்தல் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மாநிலங்கள் அரசின் கொள்கைகளுக்கு இணங்கத் தவறினால், அரசின் நிதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் விதிகள் மீது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், இந்த உத்தரவு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் இருந்தே அதிபர் டிரம்ப், தேர்தல் நடைமுறைகள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். மேலும், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோல்வியடைந்ததற்கும் இந்த மோசடியே காரணம் எனத் தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.