நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, மானாமதுரை,திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தேவகோட்டை நகா் சிவன் கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், நெய் உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிறகு வெள்ளிக் கவசத்தில் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. அலங்கரிப்பட்ட உத்ஸவா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தேவகோட்டை, சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.
திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேசுவரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இளையான்குடி ஒன்றியம், குறிச்சி காசி விஸ்வநாதா் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்று காசி விஸ்வநாதரை தரிசித்தனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து உத்ஸவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றதும் தீபாராதனை காட்டப்பட்டது.
புதுப்பட்டியில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவா் அருள்பாலித்தாா். கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும், சிங்கம்புணரி சிவபுரிபட்டி தா்மவா்திணி சமேத சுயம்பிரகதீசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.