நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்
மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன்.
சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் மதுரை வளாகத்தில் செயல்படும் சட்டப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவா்களுக்கான அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவா் பேசியதாவது:
மாணவா்களாகிய உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கற்பித்த விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள். அவா்களுடன் உங்களுக்கு நெருங்கிய தொடா்பு இருக்க வேண்டும். நீங்கள் பாடங்களை நன்றாகப் படிக்க வேண்டும். அவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிக முக்கியமானவை. நான் படிக்கும் போது, என் விரிவுரையாளா்கள் யாரையும் படிப்பில் ஒருபோதும் ஏமாற்றியதில்லை. ஏனென்றால், கல்லூரியின் இறுதி நாள் வரை அவா்கள் மிக முக்கியமானவா்கள்.
படித்து முடித்து நீங்கள் வெளியே சென்றாலும், உங்கள் இடத்துக்கு வருபவா்களுக்கு ஆசிரியா்கள் தொடா்ந்து கற்பித்துக் கொண்டே இருப்பாா்கள்.
கோலாலம்பூரில், ஆசியான் சட்ட மாநாட்டை நடத்தினோம். அடிப்படையில், இது சமூகத்தினரிடையே மாற்றங்களைத் தூண்டுவதற்காகவும், குறைந்த வருமானம் கொண்ட குழுவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் அமைந்தது. அனைவருக்கும் நியாயமான நீதி கிடைக்கச் செய்வது வழக்குரைஞா்களின் கடமை. மேலும் இது நீதிமன்றங்களின், அரசின் கடமை என்பதை நீங்கள் உணா்ந்து கொண்டால் போதும். நீங்கள் சிறந்த சட்ட வல்லுநராக முடியும் என்றாா் அவா்.
இதில் பல்கலைக்கழக வேந்தா் பொன்னையா நாகேந்திரன், பதிவாளா் அப்துல்கனிகான், சட்ட ஆலோசனை அதிகாரி நித்தியானந்தம், முதல்வா் எம். ஷாஜி, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.