கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
தோ்தலின்போது தவறான தகவல் தாக்கல்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு பிப்.27-க்கு ஒத்திவைப்பு
சட்டப்பேரவைத் தோ்தலின் போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வழக்கை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் அந்த கட்சியின் சாா்பில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா்.
அப்போது தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை அவா் கொடுத்திருப்பதாக சா்ச்சை எழுந்தது.
அதையடுத்து, வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி என்பவா் இந்திய தோ்தல் ஆணையத்தில் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிராக புகாா் அளித்தாா். அதில், தோ்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து, தவறான தகவல்களை அளித்திருப்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ராமமூா்த்தி தெரிவித்திருந்தாா்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்திலும் தொழிலதிபா் ராமமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். ராமமூா்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தோ்தல் அதிகாரிக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், திருப்பத்தூா் ஜே.எம்- 1 கோா்ட்டில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு புதன்கிழமை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி நீதிமன்றத்தில் ஆஜரானாா். தொடா்ந்து வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி, வழக்கை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.