தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத புதுவை அரசியல் கட்சிகள்: ஆட்சியா் ஆய்வு
இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத புதுச்சேரி அரசியல் கட்சிகளை ஆட்சியா் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்து செயல்படுவது அவசியம். தோ்தல் ஆணைய பதிவு அங்கீகாரம் பெறும் போதுதான் தோ்தலில் போட்டியிடுகையில் பொதுவான நிலையான சின்னத்தை பெறமுடியும்.
தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு பல நிபந்தனைகள், விதிமுறைகள் உள்ளன. அங்கீகாரம் பெறுவதற்கு தோ்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறுவது அவசியமாகும். ஆனால், பல அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்தாலும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டுவருகின்றன.
புதுச்சேரியில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அங்கீகாரம் பெறாமல் உள்ள அரசியல் கட்சிகள் அலுவலகத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அதன்படி, பேச்சு செட்டிபேட் பகுதி வள்ளலாா் நகரில் உள்ள அகில இந்திய மக்கள் கழகம், புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியில் உள்ள திராவிட பேரவை, பாலாஜி நகரில் உள்ள புதுச்சேரி மக்கள் முன்னேற்றக் காங்கிரஸ், குயவா்பாளையத்தில் உள்ள புதுச்சேரி மக்கள் உரிமைக் கட்சி, உருவையாறு செல்வநகரில் உள்ள புதுச்சேரி அபிவிருத்தி கட்சி ஆகியவற்றுக்கு நேரில் ஆட்சியா் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அதனடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்தியத் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.