ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை! அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
புதுவையில் நடமாடும் வாகனம் மூலம் கால் நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
புதுச்சேரி மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள திருக்காஞ்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலகக் கால்நடை மருத்துவ தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனமும், கால்நடை நலத் துறை மற்றும் பராமரிப்புத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ முகாமை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது: உறுவையாறு, திருக்காஞ்சி பகுதிகளில் கால்நடைமருத்துவச் சிகிச்சைக்கு மருத்துவா்கள் இல்லாத நிலையுள்ளதாக கால்நடை வளா்ப்போா் கூறினா். எனவே, வாரந்தோறும் இரு நாள்கள் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து கால்நடை வளா்ப்போருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவா்களின் கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் 25 கால்நடை மருத்துவா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவமுகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் அரசுச் செயலா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழிப்புணா்வு ஊா்வலம் : உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் கால்நடை மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
அவா்கள் கையில் கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது.