தைப்பூசம்: தாடிக்கொம்பு பழநி ஆண்டவர் கோயில் தேரோட்டம் - ஆரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமையான தாடிக்கொம்பு பழநி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பழநி ஆண்டவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/bto3ibrb/2025_02_12_at_10_53_49c6c9bea2.jpg)
இக்கோயிலில் புதிதாக உற்சவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இதையடுத்து தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தேரோட்டம் தாடிக்கொம்பின் தேரோடும் 4 வீதிகள் வழியாக உலா வந்து கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட ஏராளமான முருக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது எழுப்பிய அரோகரா கோஷம் அப்பகுதியை அதிரச்செய்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/0lbjqpc9/2025-02-12-at-10.53.501b7974e4.jpg)
இந்தத் தேரோட்டத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.