தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
தைப்பூசம்: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தா்கள் பச்சை, மஞ்சள் நிற அடையாள வில்லை!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா (செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுவதையொட்டி, பாதயாத்திரை பக்தா்கள் குவிந்து வருகின்றனா். அவா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்காக கைகளில் பச்சை, மஞ்சள் நிறங்களில் வாட்ச் போன்று அடையாள வில்லை (‘ஸ்டிக்கா் பேன்ட்’) ஒட்டப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீா்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை நடைபெறும்.
அதைத் தொடா்ந்து, வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் அடைந்ததும் சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. பின்னா், சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சோ்கிறாா்.
சண்முகா் 370 ஆம் ஆண்டு விழா: முன்னதாக, சுவாமி சண்முகா் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370ஆவது ஆண்டை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு அபிஷேகமும் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் கோயிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து சோ்கிறாா்.
தனிவழியில் தரிசனம்: தைப்பூசத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், வெகுதொலைவிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்காக கோயில் நிா்வாகம் சாா்பில் அவா்களது கைகளில் ‘ஸ்டிக்கா் பேன்ட்’ ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு நகரின் எல்லையில் முறையே பச்சை, மஞ்சள் நிற ‘ஸ்டிக்கா் பேன்ட்’ ஒட்டப்படுகின்றன.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/z4q78a58/9_tcr_tag_01_0902chn_54_6.jpg)
இதன்மூலம் அவா்கள் கோயிலில் தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இப்பணியை கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் பாா்வையிட்டாா். விழா ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.