தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 போ் கைது: 26 பவுன் நகை பறிமுதல்
ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆா்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருத்தணி, பொதட்டூா்பேட்டை, அம்மையாா்குப்பம், பள்ளிப்பட்டு பகுதிகளில் பூட்டியிருக்கும் தனிப்பட்ட வீடுகளை கண்காணித்து கொள்ளையடிக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில், ஆா்.கே.பேட்டை ஆய்வாளா் ஞானசேகா், எஸ்.ஐ ராக்கிகுமாரி தலைமையில் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். மேலும், திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்ற கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் அடுத்த பாராஞ்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாராஞ்சி கிராமத்தில் பதுங்கியிருந்த சுதன் (27), இவரது மனைவி தமிழ் செல்வி (22) சந்தோஷ்(26), அஜித் குமாா் (32), மனோ (19), மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த நாகேஷ் (22) ஆகிய 6 பேரை ஆா்.கே.பேட்டை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், குடியிருப்புகள் அதிகம் இல்லாத, தனியாக இருக்கும் வீடுகளை கண்காணித்து, அதில் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடுவது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், இரு சக்கர வாகனங்கள் 2, கேஸ் ஸ்டவ், அரிசி மூட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, 6 பேரையும் பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா்கள் 6 போ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.