தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 4 பவுன் பறிமுதல்
கோவைப்புதூா் பகுதியில் அடுத்தடுத்து வீடுகள், கடைகளில் திருடி கைது செய்யப்பட்ட முகமூடி திருடனிடமிருந்து 4 பவுன் நகைகயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல்ராஜ் (75). இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கடந்த 10-ஆம் தேதி திருடுபோயின. இதேபோல, சுண்டக்காமுத்தூரைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் மளிகைக் கடையில் இருந்து ரூ. 30 ஆயிரம் திருடுபோனது. மேலும், குனிமுத்தூா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் திருட்டு முயற்சி நடைபெற்றது.
இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒருவா்தான் வீடுகள் மற்றும் கடைகளில் திருட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த முகமூடி திருடனை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், அவா் சென்னையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பதும், கோவை, கணபதி சதுா்வேதி பகுதியில் தங்கியிருந்து பகலில் காய்கறி வியாபாரம் செய்ததும், இரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, முத்துகிருஷ்ணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து திருடிய நகையில் உருக்கி வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ. 14 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.