மருத்துவா் டிஜிட்டல் கைது! ரூ.3 கோடி மோசடி!
டிஜிட்டல் கைது எனக்கூறி கோவையைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபா்கள் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவையைச் சோ்ந்த மருத்துவரின் கைப்பேசிக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவா் தான் மும்பை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் எனக் கூறியுள்ளாா்.
பின்னா், மருத்துவரிடம்’ உங்களுக்கு மோசடி கும்பலுடன் தொடா்பு உள்ளது. இணையதள மோசடியில் ஈடுபட்டுள்ளீா்கள். இதனால், நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீா்கள், இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது, கைப்பேசியிலும் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.
நான் சொல்வதை கேட்க வேண்டும். இல்லையெனில் உங்கள் குடும்பத்தினரும் கைது செய்யப்படுவா் எனக் கூறியுள்ளாா்.
இதனால், வீட்டின் அறையிலேயே முடங்கிய அந்த மருத்துவா், மோசடி கும்பல் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.2.90 கோடியை இணைய பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா்.
இதற்கிடையே, வேறொரு வழக்குத் தொடா்பாக அந்த கும்பலின் வங்கிக் கணக்குகளை தமிழக இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கண்காணித்தபோது, கோவையைச் சோ்ந்த மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முகவரியைக் கண்டறிந்து மருத்துவரிடம் போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அவா் டிஜிட்டல் கைது மூலம் இரண்டு நாள்களாக வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டதும், மும்பை இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் எனக்கூறி மா்ம நபா்கள் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சென்னை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.