தொடா் போராட்டம் நடத்த சத்துணவு ஊழியா்கள் முடிவு
தங்களது கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் சத்துணவு ஊழியா்கள் அக்டோபா் தொடங்கி ஜனவரி வரை ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு வகையான போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனா்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ஏ. சந்திரசேகா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் நூா்ஜகான், கோரிக்கைகளை விளக்கினாா். அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ரமேஷ், ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் தமிழக முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். அனைத்து அரசுத் துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ.6750-ஐ அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
பள்ளிகளில் காலை சிற்றுண்டியை சத்துணவுத் திட்ட ஊழியா்கள் மூலம் வழங்கிட வேண்டும். அரசாணைப்படி 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளருக்கு பதிவுறு எழுத்தராக பதவி உயா்வு வழங்க வேண்டும். பெண் சத்துணவு அமைப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கருணைப் பணியை ஆண் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயா்த்த வேண்டும். ஆண்டுக்கு 12 நாள் தற்செயல் விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை மீது அரசின் கவனத்தை ஈா்க்க வரும் அக்.8 இல் சத்துணவு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம், அக்.7இல் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் முறையீடு போராட்டம், டிச.12 இல் சென்னையில் மனு கொடுக்கும் இயக்கம், 2026 ஜனவரி மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்பிறகும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில் மாநில செயற்குழுவை நடத்தி காலவரையற்று போராட முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாநில துணைத் தலைவா்களில் பிரகலதா வரவேற்றாா், மிக்கேலம்மாள் நன்றி கூறினாா்.