அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
தொடா் விடுமுறை: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகை என தொடா் விடுமுறை காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தொடா் விடுமுறை வருவதை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வெள்ளிக்கிழமை (செப்.26) முதல் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.26) 790 பேருந்துகள், சனிக்கிழமை (செப்.27) 565 பேருந்துகள், திங்கள்கிழமை (செப்.29) 190 பேருந்துகள், செவ்வாய்க்கிழமை (செப்.30) 885 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 215 பேருந்துகள், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 145 பேருந்துகள், திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் 105 பேருந்துகள் என மொத்தம் 3190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அக்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தசரா சிறப்பு பேருந்துகள்: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்.3-ஆம் தேதி
வரை சென்னை மற்றும் கோவையிலிருந்து குலசேகரன்பட்டினத்துக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாகவும் அக்.1 முதல் அக்.3 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள்: திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்” திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக, சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு கடந்த செப். 22 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப் பேருந்துகள் வருகிற அக்.6 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.