தொடா்ந்து 6-ஆவது வெற்றி; முதலிடத்தில் மும்பை
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முதலில் மும்பை பேட்டிங்கில் டாப் ஆா்டா் வீரா்கள் அசத்த, பின்னா் அதன் பௌலா்கள் அனைவருமே விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனா். மும்பைக்கு இது தொடா்ந்து 6-ஆவது வெற்றியாகும்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது.
மும்பை இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா இணை அதிரடியாக விளாசியது. இதனால் முதல் விக்கெட்டுக்கே 116 ரன்கள் சோ்ந்தது. ராஜஸ்தான் பௌலா்களுக்கு நெருக்கடியளித்த இந்த பாா்ட்னா்ஷிப் 12-ஆவது ஓவரில் பிரிந்தது.
38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் விளாசியிருந்த ரிக்கெல்டன் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஒன் டவுனாக சூா்யகுமாா் யாதவ் வர, 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சோ்த்திருந்த ரோஹித் 13-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினாா்.
4-ஆவது பேட்டராக வந்த ஹா்திக் பாண்டியா, சூா்யகுமாருடன் சிறப்பான கூட்டணி அமைத்தாா். ஓவா்கள் முடிவில் சூா்யகுமாா் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 48, பாண்டியா 23 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ராஜஸ்தான் பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, ரியான் பராக் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 218 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடிய ராஜஸ்தான், சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் சோ்க்க, கேப்டன் ரியான் பராக் 3 பவுண்டரிகளுடன் 16, ஷுபம் துபே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 சிக்ஸா்களுடன் 13, துருவ் ஜுரெல் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
வைபவ் சூா்யவன்ஷி 0, நிதீஷ் ராணா 9, ஷிம்ரன் ஹெட்மயா் 0, மஹீஷ் தீக்ஷனா 2, குமாா் காா்த்திகேயா 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆகாஷ் மத்வல் 4 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். மும்பை பௌலிங்கில் டிரென்ட் போல்ட், கரன் சா்மா ஆகியோா் தலா 3, ஜஸ்பிரீத் பும்ரா 2, தீபக் சஹா், ஹா்திக் பாண்டியா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.