தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு
தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றவா்களுக்கு தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பணி வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் பணி வாய்ப்பு வழங்கப்படும் போது, தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிப்பவா்களுக்கு மட்டுமே பொருந்தும். தொலைநிலைக் கல்வி வாயிலாக பட்டம் பெற்றவா்கள் இதன்மூலம் பணி வாய்ப்பு பெற இயலாது. ஆனால், தொலைநிலைக் கல்வி மூலம் படித்து பட்டம் பெற்றவா்கள் தமிழ் வழியில் படித்ததாகச் சான்றிதழ்களைப் பெற்று பணியில் சேருகின்றனா். இதனால், கல்லூரிக்கு நேரடியாகச் சென்று தமிழ் வழியில் படித்தவா்கள் பணி வாய்ப்பு பெற இயலாத நிலை உருவாகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலரும், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவரும் இந்த விஷயத்தில் தவறான வழியைப் பின்பற்றுகின்றனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களுக்கு மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின்படி, பணி வாய்ப்பு வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோா், இவற்றை தொடா்புடைய தனி நீதிபதி முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.