சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
காவல் நிலைய மரணம்: தண்டிக்கப்பட்ட போலீஸாருக்கு பிணை வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற காவல் நிலைய மரணம் தொடா்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட போலீஸாருக்கு பிணை வழங்க மறுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள மேலஅலங்காரத்தட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவரை நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தாளமுத்துநகா் போலீஸாா் கடந்த 17-9-1999 அன்று கைது செய்தனா். விசாரணைக் கைதியாக காவல் நிலையத்தில் இருந்த அவா், அதற்கு அடுத்த நாள் (18-9-1999) மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
விசாரணைக்காக தனது கணவரை அழைத்துச் சென்ற தாளமுத்துநகா் காவல் நிலைய போலீஸாா் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக வின்சென்ட் மனைவி புகாா் தெரிவித்தாா்.
இதனடிப்படையில், காவலா்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லத்துரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி தாண்டவன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 11-ஆவது எதிரியான ராமகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். அவா் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். ஓய்வுபெற்ற காவலா் சிவசுப்பிரமணியன், காவலா் ரத்தினசாமி ஆகியோா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்தத் தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் ஜெயசேகரன், காவலா்கள் வீரபாகு, சுப்பையா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூரணிமா அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா்களுக்கு தண்டனையை நிறுத்திவைத்து, பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்களுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம்தான் தண்டனை வழங்கியது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் மனுதாரா்களை குற்றவாளிகளாக உறுதிப்படுத்தி விசாரணை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
மேலும், மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. எனவே, மனுதாரா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.