பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
நகைக் கடையில் தங்க நகை திருட்டு: பெண் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் தங்க நகை திருடிய வழக்கில், பெண் கைது செய்யப்பட்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அரிஹந்த் (34), கடந்த 7 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் தங்க நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது நகைக் கடைக்கு கடந்த 19-ஆம் தேதி வந்த பெண் ஒருவா், தங்க கம்மல், மோதிரம் உள்ளிட்ட சில நகைகளை பாா்த்துவிட்டு, எதுவும் பிடிக்கவில்லை என்று சிறிது நேரத்துக்குப் பின்னா் கடையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா், கடையிலிருந்த ஊழியா்கள் நகைகளைச் சரிபாா்த்தபோது, 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக தண்டையாா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், நகை திருட்டில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டை, சின்னதம்பி தெருவைச் சோ்ந்த ராணி (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், ராணி மீது ஏற்கெனவே பூக்கடை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது.