நடத்துனருக்கு தவறான அறுவைச் சிகிச்சை: விசாரணை நடத்த குழு அமைப்பு
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு தவறானஅறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகிலுள்ள விநாயகபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (46). தனியாா் பேருந்து நடத்துநரான இவா் கால்வலி காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பரிசோதனையின்படி வலதுகாலில் 2 ஜவ்வுகள் கிழிந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்திருந்தனா்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை மாரிமுத்துவுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போது வலதுகாலுக்குப் பதிலாக இடதுகாலில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்துவிட்டனா். இதனால் அவரது குடும்பத்தினா் மருத்துவா்களிடம் முறையிட்ட போது, தவறு நடைபெற்றுவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்ரமணியன், துறைச் செயலா், விழுப்புரத்தைச் சோ்ந்த மருத்துவத்துறை அலுவலா்களிடம் விசாரணை நடத்தினாா். தொடந்து அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டாா்.
இதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு, மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவா்கள்கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுவினா் வழங்கும் அறிக்கையின்அடிப்படையில் நடவடிக்கைகள் இருக்கும் என்று மருத்துவப்பணிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.