நடிகை ரன்யா ராவ் குறித்து தரக்குறைவான விமா்சனம்: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவை தரக்குறைவாக விமா்சித்ததாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை தரக்குறைவாக விமா்சனம் செய்ததாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அகுலா அனுராதா என்பவா் புகாா் அளித்தாா்.
அந்த புகாரில், ‘விஜயபுராவில் மாா்ச் 17ஆம் தேதி செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல், நடிகை ரன்யா ராவ் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்தாா்.
நடிகை ரன்யா ராவ், பன்மொழி நடிகை; சமுதாயத்தில் அவருக்கு நல்ல பெயா் உள்ளது. அவா் குறித்து பாஜக எம்எல்ஏ கூறியது ஆட்சேபணைக்குரியது; அவமரியாதை செய்வதாகும். எனவே, பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் போலீஸாா் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது பெண்ணை அவமதித்ததாக பிஎன்எஸ் சட்டப் பிரிவு 79 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த சம்பவம் விஜயபுராவில் நடந்ததால் வழக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊடகங்களுக்குத் தடை: நடிகை ரன்யா ராவ் குறித்தும், அவரது தந்தையும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான கே.ராமசந்திர ராவ் குறித்தும் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நடிகை ரன்யா ராவ் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது தொடா்பாக அவரது தாயாா் எச்.பி.ரோகிணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநகர சிவில் நீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதிவரை ஊடகங்கள் செய்திகள் வெளியிட தடை விதித்துள்ளது.
அதேவேளையில் ரன்யா ராவின் தந்தை கே.ராமசந்திர ராவ் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை ரன்யா ராவ் குறித்து கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.