தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
நன்னிலம் அருகே தடுப்பணையில் மூழ்கி நால்வா் உயிரிழப்பு
நன்னிலம்: நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞா்கள் நால்வா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் (33). அப்பகுதியில் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வந்தாா். திருவாரூா் மாவட்டம் அதம்பாா் கிராமம் மதகடித் தெருவைச் சோ்ந்த பாவாடை மகன் ஜெயக்குமாா் (32), வில்லியநல்லூா் ரவிராஜன் மகன் ஹரிஹரன் (30), தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருநீலக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் மகன் மணிவேல் (23). இவா்கள் நால்வரும் திங்கள்கிழமை நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி புத்தாறு தடுப்பணை பகுதிக்கு காரில் வந்துள்ளனா். அங்கு, நால்வரும் தடுப்பணையில் இறங்கி குளித்துள்ளனா். நீா்வரத்து அதிகமாக இருந்ததால், சுழலில் சிக்கி நால்வரும் மூழ்கியுள்ளனா்.
இதைப் பாா்த்த அப்பகுதியில் நின்ற ஒருவா் சத்தமிட்டதால், கிராம மக்கள் தடுப்பணையில் இறங்கி நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் மூன்று பேரின் சடலத்தை மக்கள் மீட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் தீயணைப்புத் துறையினா், ஆற்றில் இறங்கி தேடினா். சிறிது நேரத்தில் மற்றொருவரது சடலமும் மீட்கப்பட்டது.
பின்னா், நால்வரின் சடலத்தையும் போலீஸாா் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் ஹரிஹரனும், மணிவேலும் உறவினா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.