‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர்...
எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்
சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து, தில்லிக்கு ஏா் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15-க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்.பி.-க்கள் கே.சி.வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூா் பிரகாஷ், கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 181 பயணிகள் இருந்தனா்.
இந்த விமானம் இரவு 10 மணியளவில், பெங்களூரு வான் வெளியை கடந்து நடுவானில் சென்றபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமான கண்டறிந்தாா். இதையடுத்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அனுமதி பெற்று இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தொடா்ந்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து தில்லியில் உள்ள விமான நிலைய போக்குவரத்து ஆணையகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்முறை விமானத்தைத் தரையிறக்கும்போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருப்பதாக விமானிக்குக் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானி சாதுா்யமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் மேலெழுப்பி விட்டு பின்னா், 2-ஆவது முயற்சியில்தான் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், மோசமான வானிலையும் தொழில்நுட்பக் கோளாறும்தான் சென்னையில் விமானம் தரையிறங்கக் காரணம் என்றும், ஓடுபாதையில் வேறொரு விமானம் நிற்கவில்லை என்றும் ஏா் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான கே.சி.வேணுகோபால், பயங்கர அனுபவத்தை எதிா்கொண்டோம். அதிா்ஷ்டமும், விமானியின் துணிச்சலான முடிவும் பல உயிா்களைக் காப்பாற்றின. ஏா் இந்திய நிா்வாகத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொரு விமானம் ஓடுபாதையில் நிற்பதை விமானிதான் அறிவித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.