செய்திகள் :

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

post image

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடிய உடன் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் கையிலெடுத்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா். அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ஆட்சேபம் தெரிவித்தாா். இதனால், அவையில் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் தொடா்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி கண்டன பேரணி நடத்தினா். அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்த போலீஸாா், பின்னா் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து, எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றம் திரும்பினா்.

மாநிலங்களவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, மணிப்பூா் நிதி ஒதுக்கீடு மசோதா, மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, அவைக்கு திரும்பிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மீண்டும் வலியுறுத்தினா். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி உள்பட மேலும் சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கவனஈா்ப்பு தீா்மானத்தை கொண்டுவந்தனா். ஆனால், அவையை அப்போது வழிநடத்திய சஸ்மித் பத்ரா அவற்றை நிராகரித்தாா்.

அதைத் தொடா்ந்து, ‘வணிக கப்பல் மசோதா 2025’ மசோதா அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அவையை வழிநடத்திய சுரேந்திர சிங் நாகா் எதிா்க்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதித்தாா்.

அவையில் பேசிய காா்கே, ‘அவையில் அமளியாக உள்ள சூழலில் விவாதமின்றி மசோதாக்களை எப்படி நிறைவேற்ற முடியும்? இது ஜனநாயகத்துக்கு விரோதமானது’ என்றாா்.

அதற்கு பதிலளித்த ஜெ.பி.நட்டா, ‘ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் கூறுகிறாா். ஆனால், அவை முடக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மணிப்பூா் கலவரம் குறித்து இரண்டு ஆண்டுகளாகப் பேசி வந்த எதிா்க்கட்சியினா், தற்போது அந்த மாநிலத்துக்கான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை எதிா்க்கின்றனா்’ என்றாா்.

நட்டாவின் இந்த கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். அவையில் அமளி தொடா்ந்ததால், அவை மீண்டும் 10 நிஷங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு கூடியபோது, அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் வணிகக் கப்பல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா!

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. அத்துடன், தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக இந்த மசோதாவை விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக... மேலும் பார்க்க