Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனா். மனு அளிக்க வந்தவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனா்.
இந்த நிலையில், மனு அளிக்க வந்த பெண், ஆட்சியா் அலுவலக வாயிலுக்குள் வந்ததும் தனது கைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினா்.
பின்னா் அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் சோ்ந்த கனிகா என்பதும், தனது சகோதரியின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தனது மகளை மீட்டுத்தரக் கோரியும், இதுகுறித்த விசாரணையின்போது தன்னை தாக்கிய காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.