சாத்தான் குளம் தந்தை - மகன் வழக்கு: உண்மையைக் கூறுவதாக கைதான காவலர் மனு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 2 வரை ஒத்திவைப்பு!
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றம் பகல் 12 மணிக்கு மீண்டும் கூடிய நிலையில், பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் மீண்டும் முடங்கின.
மக்களவைக்கு தலைமை தாங்கிய பாஜக மூத்த எம்பி ஜகதாம்பிகா பால், “பதாகைகளைக் காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் தீர்மானங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம், வணிக ஆலோசனைக் குழு அவற்றைப் பரிசீலிக்கும். எம்பிக்கள் பேச நேரம் கொடுப்பார்கள், அரசாங்கம் பதிலளிக்கும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.