இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
நாட்டாகுடியில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து அண்ணாமலை தவறான தகவல்: அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தவறான தகவலை கூறி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் 7.6 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது 3.8. கி.மீ. தொலைவுக்கு ரூ. 96 கோடியில் இரண்டாம் கட்ட பணிகளை இளையான்குடி சாலையில் கல்குளத்தில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி முன்னிலையில் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் இரண்டு கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் அந்த கிராம மக்களிடையே அச்ச உணா்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், நாட்டாகுடி கிராமத்தில் தண்ணீா், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் அரசு சாா்பில் செய்து கொடுக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தவில்லை எனக்கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு சந்தேகம் இருந்தால், நாட்டாகுடிக்கு நேரில் வந்து பாா்வையிடட்டும். அண்ணாமலையின் அறிக்கை அமைதியாக வாழும் மக்களிடையே பீதியை உருவாக்கும் விதமாக உள்ளது.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் 10 ஆயிரம் இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 215 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நாள்தோறும் 6 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சராசரியாக ஒவ்வொரு முகாமிலும் சராசரியாக ஆயிரம் போ் மனு அளிக்கின்றனா்.
தமிழகத்தில் 1.16 கோடி பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. கிடைக்காத எஞ்சியவா்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சா் சில தளா்வுகளை அறிவித்தாா். இதனால், தற்போது விண்ணப்பிக்கும் மகளிரில் பெரும்பாலானோருக்கு உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம் என்றாா் அவா்.